அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 3
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர். கோபத்துடன் இரணியனை வதம் செய்த நரசிம்மருக்கு எட்டு கோவில்கள் புகழ் வாய்த்தவையாக உள்ளன. அவற்றில் இன்று மூன்றாம் கோவிலைப் பற்றிப் பார்ப்போம்.
பரிக்கல்
இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்தி கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.
யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியைத் தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையைத் தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராக’ தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்குக் காட்சியளித்தார்.
சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.