டில்லி

ற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பற்றி அறிந்துக் கொள்வோம்

கொரோனா தொற்றுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யுமாறு அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.  கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால் இந்த மருந்து ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை அளிக்காவிட்டால் இந்தியா அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.  தற்போது இந்தியா ஏற்றுமதி தடையை விலக்கி உள்ளது.  இவ்வளவு சர்ச்சையை உண்டாக்கிய ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து குறித்து இப்போது நாம் காண்போம்.

இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது மலேரியா காய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும்.   இரண்டாம் உலகப் போரின் போது இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ் நோய்க்கும் கொடுக்கப்படுகிறது. மலேரியா எதிர்க்கும் மருந்தை உட்கொண்டால் தசை மற்றும் மூட்டுகளில் வலி, தோலில் அரிப்புகள், இதயம் மற்றும் நுரையீரல் அழற்சி, காய்ச்சல், சோர்வு ஆகிய அறிகுறிகளைக் காட்டும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்து, பிளாக்குயூனில் என்ற பிராண்டின் பெயரில் பொதுவான மருந்தாக விற்பனை செய்யப்படுகிறது. இதை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் நோய் அறிகுறிகளற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய் வராமல் தடுக்க அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. தேசியப் பாதுகாப்புக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட இந்த மருந்தை அவசர நிலைகளில் மட்டுமே பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணியில் உள்ள, நோய் அறிகுறிகளற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு, இந்த நோய்த் தொற்றுப் பரவாமல் இருக்கக் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த மருந்தைப் பயன்படுத்தினால் இதயத்தில் அடைப்பு, மயக்கம், குமட்டல், தலைச்சுற்றல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

சென்ற மாதம் அரிசோனாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் காம்பினேஷன் கொண்ட குளோரோகுயின் பாஸ்பேட் மருந்தைக் கணவன், மனைவி இருவரும் உட்கொண்டனர். இந்த மருந்தை உட்கொண்டதால் கணவன் பலியாகி மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.

பிரான்ஸில் 40 கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கொடுக்கப்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 3 முதல் 6 நாட்களில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இந்த மலேரியா தடுப்பு மருந்து கொரோனா தொற்று உடலில் உள்ள செல்களில் வேகமாக நுழைவதைத் தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

சீனாவில் ஒரு நோயாளிக்கு ஹைட்ராக்ஸிகுளோராகுயின் கொடுக்கப்பட்டு நிலைமை மோசமானது. அதில் 4 நோயாளிகளுக்குக் கல்லீரல் கோளாறு, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.  குறிப்பிட்ட ஒரு நோயைத் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு மருந்து சிறந்த முறையில் சோதிக்கப்படாமல் பயன்படுத்தினால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போது அமெரிக்கா அதிக அளவில் ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மாத்திரைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில் இந்தியாவில் இதற்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் நிலவுகிறது.  இந்தியாவில் இந்த மருந்தை பெருமளவில் தயாரிக்கும் நிறுவன இயக்குநர் ஜெயின் மொத்த உற்பத்தியில் இந்தியாவின் தேவை வெறும் 10% மட்டுமே என உறுதி அளித்துள்ளார்.