சென்னை: ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிரடியாக அறிவித்து உள்ளது.
சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் செல்ஃபி மோகம் தலைவிரித்தாடுகிறது. இதன் காரணமாக தேவையற்ற நிகழ்வுகளும், உயிரிழப்பு களும் ஏற்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, ரயில் படிக்கட்டுகள்,ரயிலின் மேல் நின்று செல்பி எடுப்பது, ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது போன்ற விபரீத செயல்களில் இளைஞர் சமுதாயம் ஈடுபடுவதால், அவ்வப்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ரயில் நிலையங்களில் ஆபத்தான வகையில் செல்பி எடுப்பதற்கு தெற்கு ரயில்வே தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ரயிலில் பயணம் செய்வோருக்கான கடும் விதிகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயிலில் தொங்கியபடி பயணம் செய்தால் 3 மாதம் சிறை விதிக்கப்படும் என்றும், அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அத்துடன், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.