டில்லி
தற்போது நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பத்ம விருது கிடைக்காததால் வருத்தம் அடைந்துள்ளார்.
இந்த ஆண்டு பத்ம விருதுகள் பெற்றவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தையும் ஒலிம்பிக் போட்டி பதக்கத்தையும் வென்ற மேரி கோம் இந்திய அரசின் இரண்டாம் பெரிய விருதான பதம விபூஷன் விருது பெற்றுள்ளார். அத்துடன் முன்னாள் இந்தியப் பெண்கள் கால்பந்து அணி தலைவி பெம் பெம் தேவி பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
அதே வேளையில் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்துக்கு விருது அளிக்கப்படவில்லை கடந்த 2016 ஆம் வருடம் இந்திய அரசின் அர்ஜுனா விருதைப் பெற்றவர் வினேஷ் போகத் ஆவார். இவர் தற்போதைய உலகச் சாம்பியன் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். அத்துடன் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018 முதல் இவருடைய பெயரைப் பத்ம விருதுக்கு விளையாட்டு கழகம் சிபாரிசு செய்தும் இவருக்கு விருது அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து 3 ஆண்டுகளாக இவருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படாதது குறித்து வினேஷ் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் வினேஷ் போகத், “ஒவ்வொரு வருடமும் அரசு விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பதம விருது அளிப்பது அவர்களுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை அளிக்கிறது. ஆனால் சில நேரங்களில் இந்த விருதுகள் சமீபகாலங்களில் சாதனை புரிந்தவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.
தகுதியானவர்களுக்கு ஒவ்வொரு முறையும் விருது கிடைப்பதில்லை. இது வழக்கமான ஒன்றாகி விட்டது. இந்த 2020 ஆம் ஆண்டு விருதுப் பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை.
இந்த விருது யாருக்கு அளிக்க வேண்டும் என்பதை யார் முடிவு செய்கின்றனர்? இந்தக் குழுவில் தற்போதைய அல்லது முந்தைய விளையாட்டு வீரர்கள் உள்ளனரா? இந்த பணி எவ்வாறு நடைபெறுகிறது. இறுதியில் இந்த பணி சற்றே நியாயமற்றதாக உள்ளது” எனப் பதிந்துள்ளார்.