சென்னை: குஷ்பு உள்பட பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி சாதிக் மீது கடுமையான விமர்சனங்கள எழுந்த நிலையில், பாஜக பெண்கள் அமைப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து சாதிக்மீது, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் சைதை சாதிக். இவர், கடந்த 26 ஆம் தேதி ஆர்.கே நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது பா.ஜ.க பெண் நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசினார். அவர் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஏற்கனவே இந்துக்கள் தொடர்பாக திமுக எம்.பி. ராஜா பேசிய பேச்சு தமிழக மக்களிடையே கொந்தளிப்பான மனநிலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சாதிக்கின் பெண்கள் மீதான அருவறுப்பான பேச்சு, பெண்களிடையே மேலும் அதிருப்தியை உருவாக்கியது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் திமுகவை நெட்டிசன்கள் கடுமையாக தாக்கினர்.
இதையடுத்து பா.ஜ.க மகளிர் அணி பொதுச் செயலாளர் நதியா தலைமையில் பெண் நிர்வாகிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக் குரிய வகையில் அவதூறாகப் பேசிய தி.மு.க நிர்வாகி சைதை சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 29 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருநதார்.
இந்த நிலையில், புகாரின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புகார் தொடர்பான விசாரணை சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பா.ஜ.க பெண் நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, நமிதா, கெளதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசிய சம்பவத்தில் தி.மு.க வர்த்தக அணி நிர்வாகியான சைதை சாதிக் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சாதிக் மீத பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் பற்றி தரக்குறைவாகப் பேசுதல், பெண்களின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் சாதிக் கைது செய்யப்படுவாரா அல்லது வழக்கம்போல கண்துடைப்புக்காக வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளதாக கூறி கிடப்பில் போடுவார்களா என்பது போகப்போகத்தான் தெரியும்.
பெண்களை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது போலீசில் பாஜக புகார்! கைது செய்யப்படுவாரா?