சென்னை: மக்களவை துணை சபாநாயகர் பதவி எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். அவ்வாறு செய்தால் சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்ய துணைபுரிவோம் என கூறியுள்ளார்.
18வது மக்களவை கடந்த 24ந்தேதி (நேற்று) தொடங்கியது. அதைதொடர்ந்து தற்காலிக சபாநயாகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்ம பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்த தற்காலிக சபாநயாகர் மக்களவை எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வருகிறார். நேற்று தொடங்கிய பதவி பிரமாணம் நிகழ்வு இன்றுடன் முடிவடைகிறது.
இதற்கிடையில், மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனுக்களும் தாக்கல் செங்யயப்பட்டு வருகிறது. மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். அதன்படி மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா பாஜக சார்பில் களமிறக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்த உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து துணை சபநாயகர் பதவிக்கும் கடுமையான போட்டி எழுந்துள்ளது.
துணை சபாநாயகர் பதவியை, பாஜக தலைமை, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வழங்க முன்வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட இண்டியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து, பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது தான் மரபு என அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவதாக இருந்தால் சபாநாயகர் தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்றும் பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான விவாதத்தை விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.