சென்னை: “தங்கலான்” படம் ரிலீஸ் செய்ய வேண்டுமானால் ரூ.1 கோடி டெபாசிட் செய்யுங்கள் என நடிகர் சூர்யா உறவினரான படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்தபடத்தின் கதாநாயகனாக நடிகர் விக்ரம் நடித்துள்ளார். அவருடன், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் (நடிகர் சூர்யாவின் உறவினரான ஞானவேல் ராஜா நிறுவனம்) மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த திரைப்படத்திற்கு முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.. முன்னதாக, இப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இநத் நிலையில், இந்த படத்தை தயாரிக்க அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் திரைப்படத் தயாரிப்பாளரும் ஸ்டூடியோ கிரீன் உரிமையாளருமான ஞானவெல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டது. மேலும் கங்குவா படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடி டிபாசிட் செய்யவும் ஆணையிட்டது.
பணம் டிபாசிட் செய்தது குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் உத்தரவிட்டு, இந்த வழக்கு ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.