டில்லி,
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு காரணமாக இன்றுவரை பணத்தட்டுப்பாடு நீடிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மத்தியஅரசு மீது குற்றம் சாட்டினார்.
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்,
மத்தியஅரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் இன்னும் பணதட்டுப்பாடு நிலவுவதாகவும், மோடியின் நடவடிக்கை காரணமாக கருப்பு பணம் ஒழிந்து விட்டதா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் மாநிலங்களான உத்தரப்பிரதேசத்தில் தேர்தலை யொட்டி 121 கோடி ரூபாயும், பஞ்சாப்பில் 70 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதை சுட்டிக்காட்டிய சிதம்பரம், இந்த பணம் அனைத்தும் வெள்ளைப் பணமா என்றும் வினா எழுப்பினார்.
2400 கோடி எண்ணிக்கையிலான பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டுள்ள நிலையில், மாதத்திற்கு 300 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளை மட்டுமே அச்சடிக்க முடியும் என்றும், பணத் தட்டுப்பாடு காரணமாக பல ஏடிஎம்கள் இன்னும் செயல்படாமல் இருக்கின்றன என்றும், இன்னும் பணத்தட்டுப்பாடு நீடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.