மும்பை: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் சில ரிசர்வ் வங்கி இயக்குநர்களுக்கு உடன்பாடில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.
பணமதிப்பிழப்பு எனும் பொருளாதார பேரழிவு நடவடிக்கையை அமல்படுத்த, மத்திய அரசு முன்வைத்த காரணங்களில், பெரும்பான்மையானவற்றை அந்த இயக்குநர்கள் ஏற்கவில்லை.
அதேசமயம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் நிதிசார் உள்ளடக்கம் ஆகியவற்றை அதிகரிக்கும் என்ற காரணங்களை மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை ஏற்காததற்கு அவர்கள் கூறிய காரணங்களில் மிக முக்கியமானவை என்னவெனில், கருப்புப் பணம் என்பது மிகப்பெரும்பாலும் நேரடி பண வடிவத்தில் இருப்பதில்லை.
தங்கம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களின் வடிவங்களில்தான் உள்ளன. எனவே, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை தடைசெய்வதன் மூலம், இத்தகைய சொத்துக்களை எதுவும் செய்துவிட முடியாது.
மேலும், பணமாக புழங்கும் கருப்புப் பணத்தின் அளவு ரூ.400 கோடி அளவிலேயே இருக்கும்போது, அந்த தொகை எந்தப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்பவைதான் இரண்டு மிக முக்கியமான காரணங்கள்.
இந்தக் காரணங்களை சிறிதளவே பொருளாதாரம் தெரிந்த பல சாதாரண மனிதர்களும் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி