சென்னை
செல்லாத நோட்டுக்களைக் கொண்டு சிறைக்கைதிகளால் கோப்புகள் தயாரிக்கப்படுகின்றன
பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ. 1000 மற்றும் ரூ 500 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். அந்த நோட்டுக்கள் வங்கிகளில் செலுத்தப் பட்டன. அந்த சமயத்தில் புழக்கத்தில் உள்ள நோட்டுக்களில் பெரும்பாலானவை திரும்பப் பெறப் பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அத்தனை நோட்டுக்களும் என்னவானது என்னும் கேள்வி மக்கள் மனதில் இருந்தது. அதற்கான விடையாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
செல்லாத நோட்டுக்கள் தற்போது தமிழக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டுக்கள் கைதிகளுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது. செல்லாத நோட்டுக்கள் சிறுசிறு துகள்களாக மாற்றப்பட்டு கைகளால் காகிதக் கூழாக அரைக்கப்பட்டு அந்த கூழ் மூலம் கோப்புகள் தயாரிக்கப் பட உள்ளது. அந்த கோப்புகள் அரசாங்க அலுவலகங்களில் பயன்படுத்தப் பட உள்ளன. இந்த கோப்புகள் தயாரிப்பு முழுக்க முழுக்க கைதிகளால் செய்யப்பட உள்ளன.
இந்த கோப்புகள் தயாரிப்புக்காக இயந்திரங்கள் பயன் படுத்தப் படவில்லை. அனைத்தும் கைத்தொழிலாக கைதிகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்த பணியில் சுமார் 25-30 கைதிகள் தினமும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் தினம் சுமார் 1000 கோப்புகள் தயாரித்து வருகின்றனர். இவர்களுக்கு தினம் ரூ. 160-200 ஊதியம் வழங்கப்படுகிறது.