மும்பை:

பணமதிப்பிழப்புக்கு பின் அரசு ஊழியர்களின் டெபாசிட் மீதான கண்துடைப்பு விசாரணையை விட்டுவிட்டு மக்களின் அடிப்படை கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில் குறிப்பிடுகையில், ‘‘மக்களை திசைதிருப்பும் செயலில் ஈடுபடும் வகையில் மயக்க மருந்து செலுத்துவதை மத்திய அரசு தவிர்த்து அடிப்படை கேள்விகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களின் அதிகப்படியான டெபாசிட் குறித்து மத்திய புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட தோல்வியை மறைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆர்பிஐ அறிக்கையின் படி 99 சதவீத பணம் திரும்பி வந்துவிட்டது. புழக்கத்தில் இருந்து 15.44 லட்சம் கோடி ரூபாயில் ரூ.15.28 லட்சம் கோடி ஆர்பிஐ.க்கு திரும்பி வந்துவிட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘இந்த தோல்வியை மறைக்க டிஜிட்டல் பரிவர்த்தனை என்று மத்திய அரசு மக்களை திசை திருப்புகிறது. ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனை மக்கள் மீது வலுகட்டாயமாக திணிக்கப்படுகிறது. போதுமான பண புழக்கம் இல்லை.

மக்களுக்கு தேவையான பண புழக்கம் இருந்தால் டிஜிட்டல் பரிவர்த்தனை குறைந்து, பழையபடி ரொக்க பரிவர்த்தனை அதிகரிக்கும். மேலும், ஜன்தன் கணக்குகள் மீதான விசாரணை முடுக்கிவிட்டு மக்கள் மிரட்டப்படுகிறார்கள். அதோடு வங்கி பரிவர்த்தனைகளை மீது வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது.

அரசு ஊழியர்கள் டெபாசிட் மீது மேற்கொள்ளப்படும் விசாரணை அரசின் தோல்வியை மறைக்கும் முயற்சியாகும். மக்களை அச்சத்தில் வைத்திருக்க அரசு முயற்சிக்கிறது. எம்ர்ஜென்சி சமயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது இந்திரா காந்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டார்.

அதேபோன்ற நிகழ்வு தான் தற்போது நடக்கிறது. இதன் முதல் கட்டமாக தான் அரசு ஊழியர்கள் மிரட்டப்படுகிறார்கள். இதற்காக மக்களை திசைதிருப்ப அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கும் செயலை கைவிட வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.