இந்தூர்:
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 95% தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தூய்மை நகரம் என்றழைக்கப்படும் இந்தூருக்கு, வர்த்தக நகரம் என்ற மற்றொரு முகமும் உண்டு.
நடுத்த வர்க்கத்தினர், தினக் கூலிகள், அதிகம் பணிபுரிந்து வந்தனர். மோடி அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைக்குப் பிறகு இவர்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போனது.
சிறு தொழில்கள் முற்றிலும் அழிந்து வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
தற்போது அழுக்கு சட்டையும் லுங்கியும் அணிந்து கொண்டு, இந்தூர்-மோ நெடுஞ்சாலையில் நின்று கொண்டு, அந்த வழியே செல்லும் கார்களை நிறுத்தி, ஏதாவது வேலை இருந்தால் கொடுங்கள் என்று கேட்கின்றனர்.
இந்தூரின் கஜ்ரானா சதுக்கத்தில் தினமும் 1,500-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கூடுகின்றனர். ஒப்பந்ததாரர்கள் வந்து அவர்களை வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர். குறைந்த சம்பளமாக தினமும் ரூ. 150 முதல் ரூ. 200 வரை தருகின்றனர்.
வேலை கிடைத்தால் அதிர்ஷ்டம். இல்லை என்றால் வெறும் கையோடு திரும்பி விடுகின்றனர்.
முன்பெல்லாம் பண்டிகைக்கான பொருட்களை தயாரிப்போம். அதிலும் மண் விழுந்துவிட்டது. சீன தயாரிப்புகள் வந்து எங்களை அழித்துவிட்டது என்று புலம்புகின்றனர் பலருக்கு வேலை கொடுத்த சிறு நிறுவனங்கள்.