ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர் அரசு ஒவ்வொருவரும் வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச தொகை 3-லிருந்து 15 லட்சம் வரை என்று நிர்ணயிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரமுள்ள நாட்டில் ஒருவர் இவ்வளவுதான் அதிகபட்ச தொகையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிப்பது சிக்கலானது என்று பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேவேளையின் அரசின் நோட்டுத்தடை நடவடிக்கையை எதிர்கட்சிகள் முழுமூச்சோடு எதிர்த்து விமர்ச்சித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையை மோடி ஏற்படுத்திய மாபெரும் சேதம் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி விமர்ச்சிக்கிறார்.
திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இந்த விஷயத்தில் குடியரசு தலைவர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவோ இன்னும் ஒருபடி மேலே போய் வங்கிகள் பணக்காரர்கள் தங்கள் கறுப்பு பணத்தை மாற்றிக்கொள்ள உதவி செய்கின்றன ஆனால் நடுத்தெருவில் நிற்பது ஏழைமக்கள்தான் என்று காட்டமாக விமர்ச்சித்திருக்கிறார்.
உ.பியின் முன்னாள் முதல்வர் மாயாவதி அரசின் “இந்தியா ஒளிர்கிறது” என்ற போலித்திரை கிழிந்துவிட்டது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது ஒருபக்கமிருக்க, ரூபாய் நோட்டுத்தடையால் ஏற்பட்ட பாதிப்பு தலைநகர் டெல்லியில் பட்டவர்த்தனமாக தெரிகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லியில் வந்து வேலைசெய்த கூலி தொழிலாளர்கள் சம்பளமின்மையால் தங்கள் ஊர்களுக்கு சாரிசாரியாக திரும்பி சென்றவண்ணம் இருக்கின்றனர். பரபரப்பான டெல்லியின் இயக்கத்தின் அச்சாணிகள் இவர்களே!
காங்கிரஸ் கட்சியின் அஜய் மாகென் இந்த கூலி தொழிலாளர்கள் இடம் பெயர்வதை தடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இயங்கும் டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணமாக குறைந்த பட்சம் 5000 ரூபாயேனும் கொடுத்து அவர்களை டெல்லியிலேயே தங்க வைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார், அவரது கோரிக்கைக்கு கெஜ்ரிவால் அரசிடமிருந்து எந்த பதிலும் இதுவரை இல்லாததால் மத்திய அரசுடன் சேர்த்து டெல்லி அரசையும் அவர் கடுமையாக சாடியிருக்கிறார்.