மதுரை: உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய இந்திய நறுமணப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான இவற்றுக்கு, அதிக ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன.
குறிப்பாக மஞ்சள், மிளகாய், சீரகம், ஏலக்காய், இஞ்சி, மிளகு, மல்லி உள்ளிட்ட நறுமணப் பொருட்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது; கடந்த 2018 – 19 ம் ஆண்டில் மதிப்புக் கூட்டப்பட்ட நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, 51% ஐ தொட்டது. 2019 – 20 ம் நிதியாண்டில் அமெரிக்கா, ஜப்பான், வளைகுடா நாடுகளிலிருந்து, 22 ஆயிரத்து 650 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
கொரோனா பரவலால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய நறுமணப் பொருட்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பொருட்களின் ஏற்றுமதி இலக்கு, 2025ம் ஆண்டில் 37 ஆயிரத்து 750 கோடி ரூபாயாகவும்; 2030 ல் 75 ஆயிரத்து 500 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.