சென்னை; திமுக அரசுக்கு எதிராக இன்று பாஜக கருப்புகொடி போராட்டத்தை நடத்தி வரும்  நிலையில்,  தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழலை மறைப்பதற்காகே இன்று திமுக தொகுதி மறுசீரமைப்பு  கூட்டம் நடத்துவதாக  விமர்சித்துள்ளனர்.

சென்னை பனையூரில் உள்ள தனது வீடு முன்பு அண்ணாமலை தனதுஆதரவாளர்களுடன் கருப்புகொடி மற்றும் திமுகஅரசை விமர்சித்த பதாதைகளுடன் போராட்டம் நடத்தினார். அப்போது, திமுக அரசை விமர்சித்து கோஷம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் முதல்வர் ஸ்டாலின் கோட்டை விட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் திமுக இன்று நாடகம் நடத்துவதாகவும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் உள்ள  தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

டாஸ்மாக் ஊழல் தமிழக அரசியலை புரட்டிப்போடும் என்றும், தமிழகத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழல் இந்தியாவை உலுக்கும் என்றும் அவர் கூறினார்.  இந்த ஊழலில் கண்டிப்பாக கைது நடவடிக்கை இருக்கும் என்றும், அரசு மதுபான கடை ஊழலில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

சென்னை சாலிகிராமத்தில் இல்லம் முன்பு  பாஜக மூத்த உறுப்பினர் தமிழிசை சவுந்தரராஜன் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர்   அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக முதலவருக்கு கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தார். காவிரி, மேகதாது, முல்லைப் பெரியாறு விவகாரத்திற்கு இதுபோன்ற கூட்டம் நடத்தப்பட்டதா? என்ற கேள்வி எழுப்பியவர்,  இந்த “கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – தேவையற்றது” “தொகுதி மறுவரையறை – மத்திய அரசு உறுதியளித்த பின்பும் நம்ப மறுப்பது ஏன்?” “அவரவர் ஆட்சியின் அவல நிலையை மறைக்கவே கூட்டம்” “தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொலைகள் அதிகரித்து வருகிறது”

தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ளதாகவும், தமிழகத்தை காப்பாற்ற போவது தாமரைக்கொடி தான் என்றும் கூறினார். அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த அரசு எல்லா விதத்திலும் தோல்விடயுடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் அமிஷா தொகுதி மறு வரையறையினால் தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என தெரிவித்துள்ளதாகவும், தமிழக முதல்வர் தோல்வியை மறைப்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளதாகவும் கூறினார். தமிழக மக்களின் நலனைக் காப்பதற்காக இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறுவதாகவும் தமிழிசை கூறினார்.

தமிழகத்துக்கு அண்டை மாநிலங்களுடன் தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சினைகள் உள்ளன  என கூறிய  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கேரள மாநிலத் தோடு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, செண்பகவல்லி அணை பிரச்சினை, மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் பிரச்சினை உள்ளன.

கர்நடாக அரசுடன் நீண்ட காலமாக காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை உள்ளது. கூடவே, “யார் அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம்” என்று அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் சவால் விடுத்துள்ளார். அதேபோல் பந்திப்பூர் பகுதியில் இரவுநேர போக்குவரத்து தடையால் தமிழக மக்கள் சந்திக்கும் இன்னல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி கர்நாடகாவை ஒட்டிய ஒசூர் வளர்ச்சிக்கான பெங்களூருவின் பொம்மச்சந்திராவுக்கும், தமிழ்நாட்டின் ஒசூருக்கும் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் உள்ளது. இப்படியாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

இதுவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 முறை கேரளா சென்றுள்ளார் அவர் ஒருமுறையாவது மாநில உரிமைகளப் பற்றி பேசியிருக்கிறாரா?. பகிரங்கமாக மேகேதாட்டு விவகாரத்தில் சவால் விடுத்த டிகே சிவகுமார் இன்று சென்னை வந்துள்ளார். அவரிடம் அவ்விவகாரம் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று பேசுவாரா?

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் முதல்வர். தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் அதை நடத்த மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்று தொடர்ந்து பொய் பேசி வருகிறார் ஸ்டாலின். தெலங்கானா முதல்வர் இங்கு வந்துள்ளார். அவரது வழியில் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த உத்தரவிடுவாரா?

இப்படியாக தமிழகத்தின் உரிமைகளைப் பற்றி பேசாமல், தமிழக உரிமைகளைப் பறிக்கும் மாநிலங்களின் முதல்வர்களையே இங்கு வரவழைத்து தேவை யற்ற ஒரு கூட்டத்தை ஸ்டாலின் நடத்துகிறார்.

அவர் பிரச்சினை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று சொல்லி ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார். நாடகத்தை நடத்துட்டும். பஜ்ஜி, பிஸ்கட் எல்லாம் சாப்பிடட்டும். கூடவே தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ளட்டும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.