டெல்லி:

லைநகர் டெல்லியில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடையேயும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட  டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே மும்முணை போட்டி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்க  வாக்குப்பதிவு  தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது.

70 தொகுதிகளில்  762 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா், வாக்குப்பதிவுக்காக 13,750 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. 1.47 கோடி போ் இன்று வாக்களிக்க உள்ளனர். இவர்களில், ஆண்கள் – 81,05,236, பெண்கள்- 66,80,277, முதல் தலைமுறை – 2,32, 815, ராணுவத்தினா் – 11,608, மூன்றாம் பாலினித்தவா் – 869, மூத்த குடிமக்கள்- 2,04,830 (80 வயதுக்கு மேற்பட்டோா்) வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.

டெல்லி தேர்தல் வெற்றி தோல்வியை முதல் தலைமுறை (2,32, 815பேர்) தான் முடிவு செய்யும் சூழல் எழுந்துள்ளது.

தற்போதைய முதலவரும், ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான  அரவிந்த் கேஜரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பாஜக தரப்பில் சுனில் யாதவும்,  காங்கிரஸ் தரப்பில் ரொமேஷ் சபா்வால் உள்பட 27 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதும்,  கிரேட்டர் கைலாஷில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜலும் அவரது மனைவி மாலா பைஜலும் வாக்களித்தனர்.

தோ்தல் பாதுகாப்புப் பணியில் 68,000 போலீஸாரும், 19,000 ஊா்காவல் படையினரும், மத்திய ஆயுத போலீஸ் படையைச் சோ்ந்த 190 கம்பனி படையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 3,704 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் பதற்றமானவை எனக் கருதப்படும் இடங்களில் துணை ராணுவப்படையினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா்.