டில்லி
வாக்கு பதிவு இயந்திரமும் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரமும் ஒத்துப் போகாதது குறித்து புகார் அளித்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக டில்லி வாக்காளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று மக்களவை தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அன்று 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அந்த 59 தொகுதிகளில் டில்லி நகரில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் வரும் 23 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன. இம்முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரமும் இணைக்கப்பட்டிருந்தது.
வாக்காளர் வாக்களித்ததும் அவர் வாக்களித்த சின்னம் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் தெரியும். மிலன் குப்தா என்பவர் வாக்களித்த போது அவருக்கு வேறு ஒரு சின்னம் தவறாக தெரிந்ததாக புகார் அளித்தார். அதே நேரத்தில் தாம் வாக்களித்த எண்ணுக்கு நேராக வாக்குப்பதிவு இயந்திரத்தின் சிவப்பு விளக்கு எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடி அலுவலர் குப்தாவிடம் அவர் வாக்களித்த வேட்பாளர் யார் என கேட்டு அதே பட்டனை அழுத்தி பரிசோதனை செய்வதாக கூறி உள்ளார். வாக்களிப்பு விவரம் ரகசியமானது எனக் கூறி அதை தெரிவிக்க குப்தா மறுத்துள்ளார். இதனால் அதிகாரி வேறு இரண்டு மூன்று பட்டனை அழுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் அவர் சோதனை செய்த அதே சின்னம் தெரிந்துள்ளது.
அதை ஒட்டி தவறான புகார் அளித்ததாகக் கூறி குப்தாவை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்றி தம்மை கைது செய்ய முடியாது என அவர் காவல்துறையிடம் வாதிட்டுள்ளார். அவரை சுமார் நான்கு மணி நேரம் காவலில் வைத்திருந்து பின்னர் காவல்துறையினர் விடுவித்துள்ளனர். இது குறித்து அவர் சமூக வலை தளங்களில் பதிந்துள்ளார்.
குப்தா தம்மை சட்டவிரோதமாக கைது செய்து 4 மணி நேரம் காவலில் வைத்திருந்ததாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பி உள்ளார். தேர்தல் ஆணையர் லவாசா இது குறித்து விசாரணை செய்யுமாறு டில்லி தேர்தல் அதிகாரி ரண்பீர் சிங்குக்கு உத்தரவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]