டெல்லி: டெல்லியில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து தினசரி 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  டெல்லியில்  சில நாள்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 992 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது.  2 நாட்களாக  கொரோனா சோதனை விகிதம் குறைந்துவிட்ட நிலையில், இன்று முதல் 80 ஆயிரம் சோதனைகள் செய்யப்படும்.

அரசு மருத்துவமனைகளில் ஏராளமான கொரோனா படுக்கைகள் உள்ளன. டெல்லியில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒட்டுமொத்தமாக 25 சதவீத படுக்கை வசதிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் ஐ.சி.யூ படுக்கை வசதிகளை மேலும் அதிகரிக்க உத்தரவிட்டுள்ளோம்.

டெல்லியில் 500 கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 வரை இந்த மையங்கள் செயல்படும். மக்கள் முன்வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.