டெல்லியில் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் ரூ. 30,000 லஞ்சம் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
கல்லுராம் மீனா என்ற செயற்பொறியாளர் கட்டுமான ஒப்பந்ததாரரிடம் அவரது பில்லுக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து லஞ்சம் வாங்கியபோது கல்லுராம் மீனா பிடிபட்டுள்ளார்.
டெல்லியின் முக்கிய நீதிமன்றங்களில் ஒன்றான ரௌஸ் ஆவின்யூ நீதிமன்ற கட்டுமான பணி உள்ளிட்ட முக்கிய கட்டுமானங்களை கவனித்து வரும் செயற்பொறியாளராக கல்லுராம் மீனா இருந்து வருவதை அடுத்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையை அடுத்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1.6 கோடி ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வங்கி பரிவர்தனைகளும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்யும் அரசு அதிகாரியின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் மீட்கப்பட்ட விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.