டெல்லி: தலைநகர் டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற போலி அடையாள அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவனிடம் இருந்து வெடிகுண்டு, துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பண்டிகை காலம் என்பதால், பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த மத்தியஅரசு அறிவுறுத்தி இருந்தது. மேலும், காஷ்மீரில் பயங்கரவாதிகள் கடந்த சில வாரங்களாக மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், மற்ற இடங்களிலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்தது. குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடைபெறலாம் என்பதால், அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படியும், பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்து கண்காணிக்குமாறும் மத்திய உள்துறை, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியின் முக்கிய பகுதியான லக்ஷ்மி நகரில் தங்கியிருந்த பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் இருந்துஒரு கையெறி குண்டு, ஒரு ஏகே 47 துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும்,அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது அஸ்ரஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளது என டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இந்த பயங்கரவாதி இந்திய நாட்டவரின் போலி அடையாள அட்டையுடன் டெல்லியில் வசித்து வந்ததும் தெரிய வந்ததுள்ளது. அவன்மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.