வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் ஆதரவு குரல்கள் எழுந்துவருகிறது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர், கிரேட்டா துன்பெர்க் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கிரேட்டா துன்பெர்க்

மேலும், இந்திய வேளாண் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இணையதள பக்கம் ஒன்றையும் அந்த டிவீட்டில் இணைத்திருந்தார், பின்னர் சில மணி நேரங்களில் அந்த இணைப்பை நீக்கி, புதிய இணையதள பக்கத்தை இணைத்தார்.

இந்த மனுவில் இதுவரை லட்சக்கணக்கானோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த நிலையில், இந்த இணையதள பக்கத்தை உருவாக்கியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதாக டெல்லி மாநகர காவல்துறை சிறப்பு ஆணையர் ப்ரவீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கிரேட்டா துன்பெர்க் பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த இணையதள பக்கத்தை யார் உருவாக்கினார்கள் என்று இதுவரை தெரியவில்லை, அது விசாரணையில் உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில், இன்று மாலை மற்றொரு பதிவில், “விவசாயிகளின் அமைதியான போராட்டத்திற்கு எனது ஆதரவு எப்பொழுதும் தொடரும், எந்த ஒரு வெறுப்புணர்வு, அச்சுறுத்தல், மனித உரிமை மீறல் அல்லது வன்முறையால் இதனை மாற்ற முடியாது” என்று பதினெட்டே வயதான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் பதிவிட்டுள்ளார்.