டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் தொடர்பான வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரவித்து உள்ளது. யாருடைய பாதுகாப்பும் வாபஸ் பெறப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் புகார் அளித்திருந்தனர். அவருக்கு எதிராக வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு பிரிஜ் பூஷன் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக சாட்சி அளிக்க உள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு  வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையல் பல வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை கூடுதலாக இருந்ததால் பதக்க வாய்ப்பு இழந்த போகத் நாடு திரும்பியதும் தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் வீராங்கனகைள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றதால், அவர்களுக்கு  பாதுகாப்பு வழங்கிவந்த காவலர்கள் வேறு இடங்களுக்கு  தற்காலிக பணியாக மாற்றப்பட்டதாக  கூறப்படுகிறது.

இந்த நிலையில்,   காவல்துறை பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டிருப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது  எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையையானது.

இதையடுத்து டெல்லி காவல்துறை விளக்கம் வெளியிட்டு உள்ளது. அதில்,  வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வந்த  பாதுகாப்பை விலக்கி கொள்ள எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என  தெரவித்து உள்ளது. வழக்கமான துப்பாக்கிச் சூடு மற்றும் பயிற்சி நடைமுறைகளுக்காக பாதுகாப்பு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாகக் கூறினர். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மீண்டும்  சேராததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  டெல்லி துணை போலீஸ் கமிஷனர் தேவேஷ் குமார் மஹ்லா,  வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை என்று தெரிவித்ததுடன், வழக்கமான துப்பாக்கிச் சூடு மற்றும் பயிற்சி நடைமுறைகளுக்காக பாதுகாப்பு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். இது  காவல்துறையில் ஒரு வழக்கமான விவகாரம். இந்த பயிற்சிகளை முடித்து சில பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே திரும்பி வந்துவிட்டனர், சிலர்  இரவுக்குள்  வருவார்கள்,” என்று கூறியதுடன், இதுதொடர்பாக மல்யுத்த வீரர்களுக்கு இது பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை தவறாக புரிந்துகொண்டு வினேஷ் போகத் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாகவும்,   “நிலைமை சரி செய்யப்பட்டது. பாதுகாப்பு பாதுகாப்பு தொடர்கிறது,” என்றும் தெரிவித்தார்.