புதுடெல்லி: இந்திய தலைநகரில் நடைபெற்ற முஸ்லீம் மாநாட்டு சம்பவத்தை முன்வைத்து, உலகெங்கிலும் கொரோனாவைப் பரப்பியதே முஸ்லீம்கள்தான் என்ற குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது என்றுள்ளார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா.
டெல்லியிலுள்ள நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடைபெற்ற முஸ்லீம் மாநாட்டில், பல வெளிநாட்டினரும் கலந்துகொண்டதால், அதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவலாகியுள்ளதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே, இதை முன்வைத்து கொரோனா பரவியதற்கே இதுதான் காரணம் என்ற ரீதியில் பிரச்சாரங்களும் சில தரப்பால் முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம், ஜக்கி வாசுதேவ் நடத்திய சிவராத்திரி விழா குறித்து யாரும் பேசுவதில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, “டெல்லியில் நடைபெற்ற தப்லிக்-இ-ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கொரோனா வைரஸை உருவாக்கி, அதை உலகம் முழுவதும் பரப்பியதே முஸ்லிம்கள்தான் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கக்கூடாது” என்றுள்ளார் அவர்.