கொல்கத்தா :
மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தும் டாக்டர்களுக்கு ஆதரவாக டில்லி, மும்பை, ஐதராபாத் நகரங்களில் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள் கடுமையான பாதிப்பு ஆளாகி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அண்மையில் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்து, இளநிலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொல்கத்தா டாக்டர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று இந்திய டாக்டர்கள் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கை போராட்டத்தை மேலும் தூண்டி விட்டுள்ளது. இதையடுதது, க டில்லி, மும்பை, ஐதராபாத் நகரங்களிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மஹாராஷ்டிரா டாக்டர்கள் சங்கமும், இன்று(ஜூலை 14)காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
ஐதராபாத்தில், நிசாம் மருத்துவ அறிவியல் மையம் முன்பு, டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஹெல்மெட் அணிந்தவாறும், பேண்டேஜ் ஒட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை சந்தித்து பேசிய மம்தா, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், இதனை புறக்கணித்த டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இநத நிலையில், மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாக்டர்கள் போராட்டம் காரணமாக நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மத்தியஅமைச்சர் ஹர்சவர்தன் சந்தித்து பேசினார்.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஹர்சவர்தன், மருத்துவர்கள் அனைவருக் கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன். இந்த விவகாரத்தை மேற்கு வங்க முதல்வர் கவுரவ பிரச்சனையாக பார்க்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்கு திரும்ப மமதா பானர்ஜி கெடு விதித்தது தவறு. அப்படி கெடுவிதித்ததால்தான் மருத்துவர்கள் கோபமடைந்துள்ளனர். இது தொடர்பாக மமதா பானர்ஜிக்கு கடிதம் எழுத இருக்கிறேன். அவரிடம் தொலைபேசியிலும் பேச இருக்கிறேன். மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை நடத்திவிட்டு சேவைகளை தொடர வேண்டும்.
இவ்வாறு கூறினார்.