ஐதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகளான கவிதா எம்.பி. வரும் 26-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்திய நிலையில், தற்போது சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது.
டெல்லியில் ஆட்சியில் உள்ளஆம் ஆத்மி அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ. 2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக 2 புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா உட்பட பலர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். இவர்கள் கொடுத்ததகவலின்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகரராவின் மகளும், மேலவைஉறுப்பினருமான (எம்எல்சி) கவிதாவையும் சிபிஐ நேரில் அழைத்துடெல்லியில் தமது அலுவலகத்தில்சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
எவ்வித ஆதாரங்களும் இன்றி கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது தவறு என மத்திய அரசு மீது பிஆர்எஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். ஆனால், கவிதாவை குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் சேர்க்காமல் இருந்த சிபிஐ தற்போது குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் சேர்த்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த வரும் 26-ம் தேதி கவிதா நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென நேற்று சிபிஐ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இது குறித்து கவிதா தமது சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசனை நடத்தி வருகிறார். இந்த வழக்கில் கவிதா கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், தெலுங்கானாவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதுவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மறுத்து வரும் கெஜ்ரிவாலும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.