
டில்லி
தாறுமாறாக வாகனம் ஓட்டி மனிதர்களைக் கொல்பவர்களை விட, பசுவைக் கொல்பவர்களுக்கு அதிக தண்டனை கிடைப்பதாக டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளதுடன் தீர்ப்பின் நகல் பிரதமருக்கு அனுப்பப் பட்டுள்ளது
கடந்த 2008ஆம் வருடம் ஹரியானாவச் சேர்ந்த உத்சவ் பாசின் என்பவர் தனது பி.எம்.டபிள்யூ. காரை கடும் வேகத்தில் செலுத்தி, ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதினார். மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மரணம் அடைந்தார். பின்னால் அமர்ந்து பயணித்தவர் படுகாயம் அடைந்தார். இந்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் குமாரால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில், ”உத்சவ்க்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், காயமுற்றவருக்கு ரூ.2 லட்சமும் நஷ்ட ஈடாக தர வேண்டும். குற்றவாளி. மேல் முறையீடு செய்ய விரும்பினால் ரூ.50000 ஜாமின் தொகை செலுத்தி அதற்கு ஈடாக பிணைத் தொகை தர வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.
மேலும் “மாட்டைக் கொல்பவர்களுக்கு 5 முதல் 14 வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கும் சட்டம் உள்ளது. ஆனால் கவனக்குறைவாகவும், படு வேகமாகவும் வாகனங்கள் ஓட்டி, மக்களைக் கொல்பவர்களுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையே 2 வருடங்கள் தான். இந்த தீர்ப்பின் நகல் பிரதமருக்கு அனுப்பி இந்த தண்டனை குறைவு என்பது வலியுறுத்தப்படும்” என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் சாலை விபத்துக்கள் பற்றி கூறுகையில், “நமது நாட்டின் சாலைகளே பல விபத்துக்கு காரணமாக உள்ளன. தேசிய குற்றப் பதிவு துறையின் செய்திப்படி, 2015ஆம் வருடம் மட்டும் 4.64 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் 1.48 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். பாக்கி உள்ளோர் காயம் அடைந்துள்ளனர். ஒரு நிமிடத்துக்கு ஒரு சாலை விபத்து நடக்கிறது. அதில் சராசரியாக 4 நிமிடத்துக்கு ஒரு நபர் மரணம் அடைகிறார். இந்திய அரசின் சட்டம் 21ன் படி, சாலை உபயோகிப்போரின் பாதுகாப்பு அவர்களின் அடிப்படை உரிமையாகும். சாலையில் பயணிப்போரின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்வது தலையாய கடமையாகும். எக்காரணத்தைக் கொண்டும் அதில் இருந்து நழுவ முடியாது “ என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]