புதுடெல்லி: இந்திய தலைநகரில், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்த தவறிய, காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்துவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம்.
மத்திய அரசின், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியரசு தினத்தன்று டெல்லியில், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், திட்டமிட்டு பயங்கர வன்முறை நிகழ்த்தப்பட்டது. இதற்கும் விவசாயிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுதொடர்பாக ‘டெல்லி சிட்டிசன் ஃபோரம் ஃபார் சிவில் ரைட்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம், டெல்லி உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; அமைதியாக துவங்கிய டிராக்டர் பேரணி, வன்முறையில் முடிந்தது. அது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, அந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிய, காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் முடிவில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது; குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
எனவே, அதில் இவ்வளவு விரைவாக நீதிமன்றத்தால் தலையிட முடியாது. எனவே, இந்தப் பொதுநல மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.