டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை, அமலாக்கத்துறை கைது செய்ய டில்லி ஐகோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில், தடையை விலக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதி மன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்திடம் 12 நாட்கள் போலீஸ் காவல் விசாரணையை தொடர்ந்து, வரும் 24ந்தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க பாட்டியாலா சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், அமலாக்கத்துறையும் கார்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சிபி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்தி சிதம்பரம் சார்பில் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், கடந்த 9ந்தேதி,  அமலாக்கத்துறையின் மனுவுக்கு  இடைக்கால தடை விதிப்பதாகவும்,  வரும் 20ந்தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது எனவும் கூறியிருந்தது.

இந்நிலையில், டில்லி ஐகோர்ட்டின் இடைக்கால தடையை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் சார்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.