டெல்லி:
வடக்கு டெல்லி ஜிடிபி நகரை சேர்ந்தவர் ரவீந்திரகுமார் (வயது 32). இ.ரிக்ஷா டிரைவர். கடந்த இரு தினங்களுக்கு முன் ரிக்ஷா ஸ்டாண்ட் அருகே சாலையோரம் 2 வாலிபர்கள் சிறுநீர் கழித்துள்ளனர்.
இதை பார்த்த ரவீந்திரகுமார், அந்த இருவரையும் அருகில் உள்ள கட்டண கழிப்பிடத்திற்கு சென்று சிறுநீர் கழிக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கான ரூ. 2 கட்டணத்தையும் தானே தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் தொழில் செய்யும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் நோக்கத்தோடு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த வாலிபர்கள் ரவீந்திரகுமாருடன் தகராறில் ஈடுபட்டனர். கோபத்துடன் அங்கிருந்து சென்ற வாலிபர்கள் சிறிது நேரத்தில் 15 முதல் 20 நண்பர்களை அழைத்து வந்து இரும்பு கம்பியாலும், கற்களை துண்டில் சுற்றில் தாக்கி ரவீந்திரகுமாரை அடித்தே கொன்றனர்.
ரவீந்திரகுமாருக்கு கடந்த ஆண்டு மே 9ம் தேதி தான் திருமணம் நடந்துள்ளது. அவர் கொல்லப்பட்ட கிஷோர் மார்க்கெட் பகுதியில் தான் ரவீந்திரகுமார் தனது மனைவி, பெற்றோர், 3 சகோதரர்களுடன் வசித்து வந்தார்.
இது குறித்து அவர் தாய் சுசீலா கூறுகையில், ‘‘எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களை கூட பொது இடத்தில் சிறுநீர் கழிக்க ரவீந்திரகுமார் அனுமதிக்கமாட்டார். தூய்மையை கடைபிடிப்பார்’’ என்றார்.
‘‘ஜிடிபி நகர் மெட்ரோ ரெயில்நிலைய 4வது நுழைவு வாயிலில் தான் இவர் ரிக்ஷா நிறுத்தி இயக்கி வந்தார். அந்த பகுதி முற்றிலும் அசுத்தமாக இருக்கும். ஆனால், ரவீந்திரகுமார் அந்த பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள சிரத்தை எடுத்துக் கொள்வார். அந்த பகுதியில் தான் அவர் சாப்பிடுவார். சாப்பிடும் பகுதியில் மற்றவர்களை சிறுநீர் கழிக்க எப்படி அனுமதிக்க முடியும்’’ என்று அவரது நண்பர் மனோஜ் தெரிவித்தார்.
ரவீந்திரகுமாருடன் தகராறு செய்துவிட்டு மிலன் என்பவரது ரிக்ஷாவில் இரு வாலிபர்களும் கிரோரி மால் கல்லூரிக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் திரும்பி வந்து அந்த டிரைவரை தாக்க வேண்டும் என்று பேசிக் கொண்டே பயணம் செய்தததை மிலன் உறுதி செய்தார்.
மேலும், அந்த வாலிபர்கள் இருவரும் அருகில் உள்ள ஒரு மதுகடையில் பீர் வாங்கி கடை வாசலில் உள்ள படியில் அமர்ந்து குடித்துள்ளனர். இதை தட்டிக் கேட்ட ஊழியரிடமும் தகராறு செய்துள்ளனர்.
மாலை 6 மணிக்கு நண்பர்களுடன் ரவீந்திரகுமாரை தேடி இங்கே வந்துள்ளனர். ஆனால் அப்போது ரவீந்திரகுமார் அங்கு இல்லை.
இதனால் மீண்டும் இரவு 8 மணிக்கு வந்து ரவீந்திரகுமாரை கண்டுபிடித்து அடித்து கொன்றுள்ளனர். மதுகடை வாசலில் இருந்த சிசிடிவி கேமராவில் அவர்களது முகம் பதிவாகியிருந்தது. மற்ற இடங்களில் இருந்த கேமராக்கள் எதுவும் செயல்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.