டெல்லி

டெல்லி உயர்நீதிமன்றம் பள்ளி வகுப்பறையில் குளிர்சாதன வசதி அளிக்கப்பட்டால் அந்த செலவை பெற்றோர்கலே ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஒரு சில பள்ளிகளில் வகுப்பறைகளில் ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்களிடம் கல்விக் கட்டணம், ஆய்வகக் கட்டணம் வசூலிப்பதுபோல் ஏசி கட்டணமாக மாதம் கணிசமான தொகையை அப்பள்ளிகள் வசூலிக்கின்றன. அவ்வகையில் டெல்லியில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் ஏசி கட்டணமாக மாதம் ரூ.2,000 வசூலித்து வந்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதை எதிர்த்து பெற்றோர் ஒருவர் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார். மனுவை தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

டெல்லி உயர்நீதிமன்றம் ,

”பள்ளியில் ஏசி வசதி வழங்கப்பட்டால் அதற்கான கட்டணத்தை பெற்றோர்கள்தான் கொடுக்க வேண்டும். ஆய்வக வசதி, ஸ்மார்ட் வகுப்பறை வசதி உள்ளிட்டவற்றுக்கு தனியாக கட்டணம் செலுத்துவதுபோல், ஏசிக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

பள்ளி நிர்வாகத்தின் மீது இதற்கான செலவை சுமத்த முடியாது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான பள்ளியை தேர்வு செய்யும் போது இந்தக் கட்டணங்கள் குறித்து புரிதலோடு இருக்க வேண்டும்”

என்று அறிவித்துள்ளது.