டெல்லி: ஒரே இடத்தில் பணிகோரும் ராணுவ தம்பதியை வெவ்வேறு இடங்களுக்கு 15 நாட்களுக்கு செல்லுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஜோத்பூரில் இருந்து அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து கர்னல் அமித்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதேபோன்று அவரது மனைவியும் பஞ்சாபில் உள்ள பத்திண்டா என்ற பகுதிக்கு பதவி உயர்வுடன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால் இந்த பணியிட மாற்றத்தை எதிர்த்து அமித்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராணுவத்தின் உத்தரவிலிருந்து கருத்தில் கொள்ள வேண்டிய அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என்று கூறினர்.
செவ்வாயன்று நடந்த விசாரணையின் போது, இரு அதிகாரிகளின் குறைகளைப் பற்றி ஊடகங்களுக்கு தகவல் கசிந்ததாக கூறி நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவர் ஊடகங்களை அணுகுவது பாராட்டும்படியாக இல்லை என்றும் கூறியது.
செப்டம்பர் 30 ம் தேதி தனது முடிவைப் பற்றி நீதிமன்றத்திற்குத் தெரிவித்த ராணுவம், 2 மூத்த அதிகாரிகளையும் டெல்லியில் மட்டுமே ஒன்றாக நியமிக்க முடியும் என்று கூறியிருந்தது. தற்போது 23 கர்னல்களை மட்டுமே கொண்டிருப்பதால் அதை செய்ய முடியாது என்றும் தெரிவித்து இருந்தது.
2008ம் ஆண்டு அவர்கள் திருமணம் ஆனதில் இருந்து 3 முறை ஒரே இடத்தில் பணி வழங்க அனுமதிக்கப்பட்டதையும் ராணுவம் நீதிமன்றத்தில் கூறியது.