புதுடெல்லி: கொரோனா அறிகுறி கொண்டவர்களை மட்டுமே பரிசோதனை செய்வது மற்றும் டெல்லி மருத்துவமனைகளில் டெல்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிப்பது என்ற டெல்லி அரசின் முடிவை ரத்துசெய்துள்ளார் அம்மாநிலத்திற்கான துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்.
துணைநிலை ஆளுநரின் இந்த செயல், டெல்லி மாநில – மத்திய அரசுகளுக்கு இடையிலான மோதலை மீண்டும் உயிர்ப்பிக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஆளுநர் கூறியதாவது, “அறிகுறியற்ற நபர்களும், பாதிக்கப்பட்டவர்களுடன் முக்கிய தொடர்பில் இருந்த நபர்களும் பரிசோதிக்கப்படுவார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பரிசோதனை விதிமுறைகளில் மாற்றம் செய்வதானது, கொரோனா வைரஸ் பரவுதலுக்கே வழிவகுக்கும்.
எந்தப் பாகுபாடும் இல்லாமல், டெல்லியில் அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்படும். டெல்லியைச் சேராதவர்கள் என்ற காரணத்திற்காக யாரும் புறக்கணிக்கப்படமாட்டார்கள். சுகாதாரத்திற்கான உரிமை என்பது வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார் டெல்லியின் துணைநிலை ஆளுநர்.