டில்லி,
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர்  வீட்டில் இருந்து கடந்த  நவம்பர் 29 ம் தேதி அதிகாலையில் விலைமதிப்புள்ள பல பொருட்கள் திருட்டு போயுள்ளன. அதில், பிரதமர் மோடி பரிசளித்த செம்பினாலான காந்தி கண்ணாடியும் அடங்கும்.
சசிதரூர் அளித்த புகாரையடுத்து போலீசார் இபிகோ பிரிவு 380/457 (கொள்ளை) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரூர் வசிக்கும் லோதி எஸ்டேட் பாதுகாப்பு மிகுந்த லூட்யென் பகுதியில் அமைந்துள்ளது.  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் பலர் அதே பகுதியில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
sasitharur
சசி தரூர் தனது வீட்டைச் சுற்றி ரோந்து பணியை  அதிகரிக்கவும் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் டில்லி காவல்துறையிடம் கோரிக்கையளித்ததாக டில்லி மாவட்டத்தின் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
தரூர் அளித்துள்ள புகாரின் படி, திருடர்கள் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தின் சுவரில் ஏறி,  முன் கதவினை உடைத்து அவரது பிரத்யேக அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளனர்.
அவரது வீட்டில் இருந்த  ஒரு பழமையான நடராஜர் சிலை, 12 சிறிய வினாயகர் சிலைகள் , 10 சிறிய அனுமன் விக்கிரகங்கள் மற்றும் பல பொருட்கள் திருடர்களை எடுத்து சென்றுள்ளனர்.,   இது மட்டுமின்றி பன்னிரண்டு 32 ஜிபி பென் ட்ரைவ்கள் மற்றும் ஒரு இணைய டாங்கிள் ஆகியவையும் திருடப்பட்ட பொருட்களில் அடங்கும்.
அவரது புகாரின் படி,  ‘தூய்மை இந்தியா” இயக்கத்தில் பங்கேற்றதற்காக பிரதமர் பரிசளித்த காந்தி கண்ணாடியும் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், திருட்டு குறித்து, அவரது வீட்டில் வேலை செய்யும்  ஊழியர்கள், பாதுகாப்பாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடம் விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.