டில்லி:

யோகா சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி உலகளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்நிலையில் இவர் குறித்த ஒரு புத்தகம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுது. சாமியாரான யோகா குரு ராம்தேவ் தற்போது வலுவான தொழிலதிபராக மாறியுள்ளார். பாபா ராம்தேவ் குறித்த வெளிவராத கதைகள் என்ற தலைப்பில் பிரியங்கா பதாக் நரைன் என்ற எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை ஜாக்கர்நட் புத்தக நிறுவனம் அச்சிட்டும், ஆன்லைனில் படிக்கும் வகையிலும் வெளியிட்டது. இந்த புத்தகங்கள் அமோகமான விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த புத்தகத்தில் தன்னை குறித்து தவறான தகவல்கள், சமூக வலை தளங்களில் வெளியான பொய் பிரச்சராங்கள் இடம்பெற்றுள்ளது என்று கூறி டில்லி நீதிமன்றத்தில் ராம்தேவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எதிர்தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளாமல் புத்தகத்தை அச்சிடவும், வெளியிடவும், விற்பனை செய்யவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி உத்தரவிட்டது. இதனால் புத்தக விற்பனை நிறுத்தப்பட்டது.

இதை எதிர்த்து ஜாக்கர்நட் புத்தக நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புத்தகத்தை விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து டில்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சுதந்திர உரிமை மற்றும் பேச்சு உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜாக்கார்ட் நிறுவனம் உடனடியாக ஆன்லைனிலும், கடைகளிலும் விற்பனையை தொடங்கிவிட்டது.