டில்லி:
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு ஜாமின் வழங்கிய சிபிஐ சிறப்பு நீதி மன்றம், அடுத்த விசாரணை தொடர்பாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
கடந்த 2006ம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்திற்காக, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் அனுமதி பெற்றார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
ரூ.3,500 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் குழுவுக்கு மட்டுமே உள்ள நிலையில், ப. சிதம்பரம் எப்படி வெளி நாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை அளித்தார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. சில நபர்களுக்கு பயனளிக்கும் திறனுக்கு அப்பாற்பட்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும், இதன் காரணமாக ஆதாயம் பெற்றதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் குற்றம் சாட்டியிருந்தன.
இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன் ஜாமின் வழங்கிய நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. சிபிஐ, அமலாக்கத்துறையினர், விசாரணை முடிந்ததும், எப்போது வேண்டு மானாலும் நீதிமன்றம் அணுகலாம் என்று கூறினார்.