டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் 3 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் காணப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்தை தொடர்ந்து தலைநகர் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 38,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,271 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒருநாள் மட்டும் 2,134 பேர் பாதிக்கப்பட்டு, 57 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவின் மொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட 5ல் ஒரு பங்காகும். கடந்த 7ம் தேதி முதல் 13 வரை ஒரே வாரத்தில் 37 சதவீதம் பேர் கொரோனா உறுதியாகி உள்ளது.
அதாவது ஒவ்வொரு 3 பரிசோதனைகளில் ஒருவருக்கு கொரோனா உறுதி ஆகிறது. இது மே 14 முதல் ஜூன் 13 வரையிலான ஒரு மாத சராசரியில் 5 பரிசோதனைகளில் ஒருவருக்கு என்ற ரீதியில் உள்ளது. மே 14ம் தேதி வரை 1,19,736 பேர் சோதிக்கப்பட்டு, அவர்களில் 8470 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அப்போது 14 சோதனைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இருந்தது.
ஆனால் இந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த விகிதமானது 5 என்று மாறி இருக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், டெல்லியில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது போன்ற அச்சம் ஏற்படுகிறது.
இது குறித்து டெல்லி எய்ம்ஸில் நுண்ணுயிரியல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் ஷோபா ப்ரூர் கூறி இருப்பதாவது: டெல்லியில் சமூக பரவல் நிகழ்வதாலேயே 3ல் ஒருவருக்கு கொரோனா உறுதியாகிறது. பரிசோதனை செய்யப்படும் 3ல் ஒருவருக்கு கொரோனா என்பது பாசிட்டிவ் அறிகுறிகளை கொண்டவர்களை மட்டுமே பரிசோதித்ததன் விளைவாகவும் இருக்கலாம். நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்களை மட்டுமே நீங்கள் சோதித்தால், நேர்மறை விகிதம் நிச்சயமாக அதிகமாக இருக்கும் என்று கூறினார்.