சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் சில தினங்களில் நியமிக்கப்படுவார் என டெல்லி காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலையடுத்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விலகினார். இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
காங்கிரசை சேர்ந்த முக்கிய தலைவர்களான சிதம்பரம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், குஷ்பு போன்றோர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களையும், அகில இந்தியகாங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலையும் சந்தித்து பேசினர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதையடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் செய்ய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லியில், துணைத்தலைவர் ராகுல், முகுல் வாஸ்னிக், சின்னா ரெட்டி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், வசந்தகுமார் ஆகிய மூவரின் பெயரை இறுதியாக தேர்வு செய்துள்ளதாகவும், இவர்களில் ஒருவரை தமிழக காங்கிரஸ் தலைவராக அறிவிக்க காங்கிரஸ் டெல்லி மேலிடம் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், தமிழக இளைஞர் காங்., தலைவர் விஜய் இளஞ்செழியன் முன்னாள் தலைவர் இளங்கோவன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.