டில்லி:
காவிரி மேற்பார்வை குழு இன்று டெல்லியில் கூடுகிறது. அப்போது தமிழகம், கர்நாடகம் தாக்கல் செய்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்து உச்ச நீதி மன்றத்தில் அறிகை தாக்கல் செய்யும்.
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 5ம் தேதி, தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 16ம் தேதி வரை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் மத்திய நீர்வளத்துறை செயலாளரை தமிழகமும், கர்நாடகமும் அணுகலாம் என்றும் கூறியது. இதனால் கர்நாடகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் திருத்தம் கோரும் மனுவை கர்நாடக அரசு கடந்த 11ம் தேதி தாக்கல் செய்தது. அதை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், வரும் 16ம் தேதி வரை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும், தண்ணீரை திறந்துவிடுவது பற்றி காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேற்பார்வை குழு செயல்படவேண்டும்’’ என கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதைத்தொடர்ந்து கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் 12-ந் தேதி நடைபெற்றது. காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் உட்பட் 3 அதிகாரிகள் பங்கேறறனர். மேலும், கர்நாடகா, பாண்டிச்சேரி, ஆந்திரா மாநில தலைமைச்செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று கூட்டம் நடைபெறுகிறது.