டெல்லி:  டெல்லி  கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக, டெல்லி செங்கோட்டை, மெட்ரோ நிலையம், நேதாஜி சுபாஷ் மார்க் பகுதிகள் மூடப்பட்டுள்ளது.  உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மேலும் பல துறை அதிகாரிகள் ஆய்வுகள் செய்து வருகின்றனர்.


டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலைய சிக்னலில் நின்றிருந்த கார் திடீரென வெடித்து   சிதறியது. இச்சம்பவத்தில் அருகே இருந்த கார்களும் தீப்பற்றி எரிந்ததில், இரதுவரை  10 பேர் உயிரிழந்துள்ளனர்.. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தினார்.

கார் வெடித்த பகுதி மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கிஎ  10 பேர் உடல் சிதறி இறந்தனர்.  கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. அப்போது சாலையில் வாகனங்களில் இருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் நிலைகுலைந்து போயினர். அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. எதிர்பாராத இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்றிருந்தவர்களும், சாலையில் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்தனர். தீயணைப்பு பணி துரிதமாக நடந்தது.

கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில், இந்த கார் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.  இதையடுத்து டெல்லியில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ, என்.எஸ்.ஜி, டெல்லி போலீசார் ஆகிய விசாரணை அமைப்புகள் புலன் விசாரணையை தொடங்கியுள்ளன.

இதற்கிடையில்,  பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். எல்லா கோணங்களிலும் விசாரணை நடப்பதாக அவர் கூறியுள்ளார்.

டெல்லி கார் வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கொல்கத்தா, காசியாபாத், ஜம்மு, ஸ்ரீநகர், லக்னோ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக  கார் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த உள்துறை அமைச்ச்ர அமித்ணா  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  இந்த  ” குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பயங்கரவாதம் உள்பட அனைத்து கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்களை பகுப்பாய்வு செய்து முடித்த பிறகே, அடுத்தகட்ட விவரங்கள் தெரிய வரும். காயமடைந்தவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம் குறித்து டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு, குற்றப்பிரிவு, என்ஐஏ, எஸ்பிஜி குழு, என்எஸ்ஜி உள்ளிட்ட உயர்மட்ட புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.” என தெரிவித்தார்.