டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று  மதியம் 2மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அகில இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்திய  தேர்தல் ஆணையம் மதியம் 2 மணிக்கு டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிக்கும் என அறிவித்துள்ளது. அத்துடன் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் உள்பட மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட  டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைகிறது. இதையொட்டி, புதிய தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் தேதிதிகளை அறிவிக்க உள்ளது.

தலைநகரில் டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்து வரும் ஆத்ஆத்மி கட்சி,   ஆட்சியை மீண்டும் தக்க வைக்க போராடி வருகிறது. ஆனால், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.  இந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில்,  மக்களவை தேர்தலை போன்று டெல்லி தேர்தலிலும் காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணி  அமைத்து போட்டியிட வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். தற்போதைய நிலையில் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

இதற்கிடையில்,   தேர்தலை முன்னிட்டு, ஏற்கனவே  மொத்தமுள்ள  70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக சார்பில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் கட்சிகள் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.