டெல்லி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில், அது உருவாவதில் தாமதம் எற்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு இலங்கை கடலோர பகுதிகளை அடையக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 19-தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை கனமழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.