நியூஸ்பாண்ட்:

தி.மு.க. தலைவர் கருணாநிதி, நேற்று திடீரென, முரசொலி கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டார். கிட்டதட்ட 11 மாதங்களாக, சிகிச்சை தொடர்பாக காவேரி மருத்துவமனைக்குச் சென்றததைத் தவிர வேறு எங்கும் அவர் அழைத்துச் செல்லப்படவில்லை.

முரசொலி பவள விழா, அவருக்கு நடத்தப்பட்ட வைரவிழா போன்ற நிகழ்ச்சிகளின்போதும், கோபாலபுரம் இலத்திலேயே ஓய்வெடுத்துக்கொண்டி ருந்தார். முதுமையும் உடல் நலிவும் அவரை முடக்கிப்போட்டிருந்தன என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் நேற்று திடீரென அவர் முரசொலி கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டார். இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தி ருக்கிறார்கள்.

“நீண்ட காலத்துக்குப் பிறகு தலைவர் வெளியே வந்திருக்கிறார். அடுத்து பேசவும் ஆரம்பித்து விடுவார். அவரது கர கர கம்பீரக் குரலை விரைவில் கேட்கப்போகிறோம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கருணாநிதியின் இந்த விசிட் வேறு சில பிரச்சினைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவர் அழைத்துவரப்படும் தகவலை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாராம். கருணாநிதியின் மகளும் தி.மு.க. மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்.பி.க்குக்கூட தகவல் சொல்லப்படவில்லையாம்.

இதனால் கனிமொழியும் அவரது தாயார் ராஜாத்தியும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். இன்னொரு புறம் வேறுவித பிரச்சினையை உண்டாக்கிவிட்டது. கருணாநிதிக்கு 24 மணி நேரமும் கருப்புப்பூனைப்படை பாதுகாப்பு உண்டு. இவர்களது பாதுகாப்பில் இருப்பவரது நிகழ்ச்சி நிரல்கள் முன்னதாகவே சொல்லப்பட வேண்டும் என்பது விதி.

ஆனால் கருப்புப்பூனைப்படைக்கும் தகவல் சொல்லப்படவில்லையாம். லோக்கல் போலீசாருக்கு மட்டுமே கடைசி நேரத்தில் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் கருப்புப்பூனைப்படை அதிகாரிகள் லோக்கல் போலீசார் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். அவர்கள், “கருணாநிதிக்கு ஏதாவது ஒன்று நடந்தால் நாங்கள் அல்லவா பதில் சொல்ல வேண்டும்” என்று குமைகிறார்களாம்.

இன்னொரு புறம் கருணாநிதியின் மருத்துவர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். “கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருணாநிதியை சந்திக்க நேரம் கேட்ட போதுகூட, இன்பக்ஷன் ஏற்படும் என்று மறுத்தோம்.

ஆனால் தற்போது தீபாவளிக்கு வெடி வெடித்ததால், சென்னை நகரில் காற்று மாசு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இந்த நிலையி்ல் முதியவரான கருணாநிதியை அழைத்துச் சென்றிருக்க வேண்டுமா” என்று ஆதங்கப்படுகிறார்களாம்.

‘“விரைவில் கருணாநிதி முழு நலம் பெற்றுவிடுவார். அப்போது இந்த விவகாரங்கள் எல்லாம் சரியாகிவிடும்” என்கிறார்கள் தொண்டர்கள்.

நடக்கட்டும்.. நாமும் வாழ்த்துவோம்!