டெல்லி: எதிர்காலப் போர்களை எதிர்கொள்ள கூட்டு ராணுவப்படைகளை உருவாக்கி தயாராக இருக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படைகளைச் சோ்ந்த கமாண்டா்களுக்கான முதலாவது ஒருங்கிணைந்த இரண்டு நாள் மாநாடு செப்டம்பர் 4 மற்றும் 5ந்தேதிகள் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் அண்டை நாடுகளின் பிரச்சினை, மற்றும் பல பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதில், பேசிய அமைச்சர், எதிர்காலப் போர்களை எதிர்கொள்ள கூட்டு ராணுவப் பார்வையை உருவாக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார் , மேலும் நாட்டின் வடக்கு எல்லை மற்றும் அண்டை நாடுகளில் உள்ள நிலைமையை ஆழமான மற்றும் பரந்த பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
நாட்டில் அமைதியை நிலைநிறுத்த ராணுவத்தினரும், பாதுகாப்பு படைகளும் போருக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். உலகளவில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவி வருகிறது. ஆனால் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவில் அமைதியான சூழலே நிலைத்து வருகிறது. இருப்பினும், நம்மைச் சுற்றி நடக்கும் விவகாரங்களை கவனமாக கண்காணித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நமது நாட்டில் அமைதி தொடர பாதுகாப்பு படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். வளமான எதிா்காலத்தை நோக்கியே நமது சிந்தனைகள் இருக்க வேண்டும். எனவே, எந்த இடத்தில் பழைமையான போா் முறைகளை பயன்படுத்த வேண்டும், எங்கு நவீன தொழில்நுட்பங்கள் தேவை என்பதை கமாண்டா்கள் கண்டறிந்து இரண்டையும் ஒருங்கிணைத்து செயல்படுவது காலத்தின் தேவையாக உள்ளது.
ஏனெனில், வான்வெளி, மின்னணு போா் முறைகள் என நவீனகாலத்தில் பல்வேறு போா் முறைகள் நேரடியாகவும் மறைமுறையாகவும் பின்பற்றப்படுகின்றன. இந்தச் சூழலில் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகள் குறித்த அறிவையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
தற்போது ரஷியா-உக்ரைன் போா், காஸா போா், சீனாவுடனான எல்லை விவகாரத்தில் பேச்சுவாா்த்தை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிலவரம் என இந்தியாவின் அண்டை நாடுகளில் தொடா்ந்து நிலவி வரும் அபாயகரமான சூழல் அமைச்சர் முப்பையினரை போருக்கு தயாராக இருக்க வேண்டும் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.