சென்னை

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் முட்டாள் அரசு மட்டுமே பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும் என பிரதமர் மோடியை தாக்கி உள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஒரு செய்தி அளித்தார். அந்த செய்தியில் செயற்கைக் கோளை குறிபார்த்து தாக்கும் ஏ சாட் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் பிரதமர் இந்த செய்தியை அறிவித்தது தேர்தல் விதிகளை மீறிய செயல் என எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் விதிகளை மீறிய செயல் அல்ல என அறிவித்தது. ஆயினும் எதிர்க்கட்சிகள் இந்த பதிலால் திருப்தி அடையவில்லை. அது மட்டுமின்றி ராணுவ விவகாரங்களை தேர்தல் நேரத்தில் அறிவிப்பது என்பது ஒரு வகை தேர்தல் பிரசாரம் எனவும் தங்களின் சாதனைகள் பட்டியலில் மோடி அரசு ராணுவ நடவடிக்கைகளையும் கூறி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம், “பல வருடங்களாக செயற்கைக் கோளை தாக்கும் ஏவுகணைகள் நமது ராணுவத்திடம் உள்ளன. ஒரு புத்திசாலி அரசு அதை ரகசியமாக வைத்திருக்கும். முட்டாள் அரசு மட்டுமே அதை வெளியிட்டு பாதுகாப்பு ரகசியங்களை அம்பலப்படுத்தும். தேர்தல் பரப்புரையின் இடையில் இதை பிரதமர் சொன்னது எதர்கு ? இதுவும் ஒருவகை பிரசாரமா? அல்லது பாஜக தனது எதிர்காலத்தை வளமாக்க இவ்வாறு செய்துள்ளதா? ” என கேள்வி எழுப்பி உள்ளார்.