டெல்லி: இந்திய ராணுவத்துக்கு 2,290 கோடி மதிப்பிலான தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ராணுவத்தின் கரங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக 72,000 சிக்சாஹர் ( Sig Sauer assault rifles) துப்பாக்கிகளையும் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்தும் கவுன்சில் (DAC) கூட்டம், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய ராணுவத்தின் ஆயுதப்படைகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்களை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனையாளர்களிடமிருந்து செய்யப்படும் கொள்முதலும் அடங்கும். அதன்படி சுமார் 2,290 கோடி மதிப்பிலான தளவாடங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு கையகப்படுத்தல் நடைமுறை (DAP) 2020 ஐ வெளியிட்டார். முதல் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (DAP) 2002 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, பின்னர் அதிகரித்து வரும் உள்நாட்டுத் தொழிலுக்கு உத்வேகம் அளிப்பதற்கும், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பை அடைவதற்கும் அவ்வப்போது இந்த நடைமுறை விதிகள் திருத்தப்பட்டன.
தற்சார்பு இந்தியா என்னும் குறிக்கோளுக்கு ஊக்க அளிக்கும். இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான குறிக்கோளைக் கொண்ட மேக் இன் இந்தியா முன்முயற்சி மூலம் இந்திய உள்நாட்டு தொழில்துறை மேம்பட்ட்டு வருகிறது.
புதிய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய உள்நாட்டு தொழில்துறையின் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் இறக்குமதி மாற்று மற்றும் ஏற்றுமதிக்காக உற்பத்தி மையங்களை நிறுவ அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை DAP 2020 உள்ளடக்கியுள்ளது.