பெங்களூரு:
நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் செய்தார். இதன் காரணமாக தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த முதல் அமைச்சர் என்ற பெருமையையும் ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.
பெங்களூருவில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான எச்ஏஎல் நிறுவனம், ‘ தேஜஸ்’ என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரித்துள்ளது. முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமான படை வைஸ் மார்ஷல் என். திவாரி ஆகியோர் பயணம் சென்றனர்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டதைத் தொடர்ந்து தேஜாஸ் போர் விமானங்களை எச்ஏஎல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே 40 போர் விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், மேலும் 50 கோடி செலவில் மேலும் 80 தேஜஸ் விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை மீண்டும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இன்று பெங்களூருவில் நடைபெறும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தயாரிப்புகளின் கண்காட்சியில் கலந்துகொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு விமானிகள் அணியும் உடை அணிந்து, ஏர் வைஸ் மார்ஷல் திவாரியுடன் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் இன்று காலை பறந்தார்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராஜ்நாத்சிங், “இந்த நாளுக்காக அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.
இந்த தேஜஸ் விமானம் மணிக்கு 2005 கிலோமீட்ட்ர் வேகத்தில் பறக்கும் திறன் உடைய இந்த விமானம் மிக்-21 ரக போர் விமானத்திற்கு மற்றாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தை கடற்படை பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தும் வகையில், விமானம் தாங்கி கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கும் முயற்சி அண்மையில் கோவாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.