அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தரவில்லை என்று அவரது இந்த செய்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் படைவீரர் பிரிவின் தலைவர் கர்னல் ரோகித் சவுத்ரி கூறியுள்ளார்.

அக்னிவீர் திட்டம் மூலம் ஒப்பந்த அடைப்படையில் ராணுவத்தில் பணியமர்த்தப்படும் வீரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இதையடுத்து அக்னிவீரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் படைவீரர் பிரிவைச் சேர்ந்த கர்னல் ரோகித் சவுத்ரி மற்றும் ஓய்வுபெற்ற விங் கமாண்டர் அனுமா விதிஷா ஆகியோர், “இந்திய ராணுவத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், நிரந்தர ராணுவ வீரர்களுடன் ஒப்பிடும்போது அக்னிவீரர்களுக்கு குறைந்த மரியாதை மற்றும் வசதிகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

தவிர, அக்னி வீரர்கள் வீரமரணம் ஏற்பட்டால் தியாகி அந்தஸ்து கிடைப்பதில்லை என்றும் ஒப்பீட்டளவில் சிறிய தொகையே அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வீரமரணமடையும் அக்னிவீரர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் இதுவரை 13 அக்னிவீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது இழப்பீடு கிடைக்கப்பெறாத ஒரு ராணுவ வீரரின் பிரச்சினை மட்டுமல்ல வீரமரணம் அடைந்த 13 அக்னி வீரர்கள், ராணுவத்தில் பணிபுரியும் அக்னி வீரர்கள், பயிற்சி பெறும் அக்னி வீரர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்த பிரச்சனை என்ற முழு உண்மையை மறைக்க ராஜ்நாத் சிங் முயற்சிக்கிறார்.

அக்னிவீர் திட்டம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அவர்கள் வலியுறுத்தினர்.