லக்னோ,
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்த காரணமாக இருந்த ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டுவிழா நடைபெறுகிறது.
கடந்த மாதம் 18-ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி எல்லை பகுதியில் இருக்கும் ராணுவ தலைமை யகத்தின்மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய அதிரடி தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் பலியாகினர்.
இதையடுத்து, கடந்தவாரம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய கமாண்டோ படையினர் அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அழித்ததுடன் சுமார் 50 தீவிரவாதிகளை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலுக்கு காரணமாக இருந்து, ஆலோசனை வழங்கிய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருக்கு பாராட்டு விழா நடத்த உத்தரப்பிரதேசம் மாநில பா.ஜ.க. தீர்மானித்தது.
இதனையொட்டி, உ.பி. மாநில தலைநகரான லக்னோவில் நாளை ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
லக்னோ நகரம் முழுவதும் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் ஆகியோரை பாராட்டி பிரமாண்ட பேனர்களும், கட்அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.
நாளை பிற்பகல் 2 மணியளவில் உ.பி. அமாவ்சி விமான நிலையத்துக்கு வந்திறங்கும் மனோகர் பரிக்கருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோமதி நகரில் உள்ள பிரபல பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெறும் பாராட்டு விழா கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.