சென்னை: அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில்,  சபாநாயகர் அப்பாவு  இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார்.

அஎ திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது தனக்கு இதுவரை சம்மன் வரவில்லை என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு,  சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில்  பேசிய தற்போதைய சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும் அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வாறு யாரும் பேசவில்லை என்றும், அப்பாவு உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்ததாகவும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அப்பாவுவின் கருத்து,   அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி  எம்.பி.எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தில் அவர்மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பாக நேரில் ஆஜரானார். அப்போது, தான்,   நீதிமன்ற சம்மனை பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு எனவும், நீதிமன்ற சம்மன் ஏதும் தனக்கு வரவில்லை எனவும், நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளதாகவும் ந தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து,  வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளிவைத்தார்.

பின்னர்   நீதிமன்ற வளாகத்தில் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தபோது, தான் சென்னையில் இருந்த போதும், நெல்லை மாவட்டத்தில் சொந்த ஊரில் இருந்த போதும் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலர்களிடம் சம்மன் அல்லது கடிதங்கள் ஏதும் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன்” எனத் தெரிவித்தார்.