சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழநாடு அமைச்சர் கேஎன் நேரு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக அரசு மீது எதிர்க்கட்சியாக இருந்த திமுக விமர்சித்து வந்தது. இதையடுத்து, அவர்கள்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும், திமுக ஆட்சிக்கு வந்ததும் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.
அதன்தொடர்ச்சியாக தற்போது, அமைச்சர் கேஎன் நேரு மீது அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்து 2020-ல் கோவை பொதுக்கூட்டத்தில் எஸ்பி வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக கோவை நீதிமன்றத்தில் கேஎன் நேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போதைய அமைச்சர் வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கேஎன் நேரு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்து, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி இளந்திரையன்.